அமைச்சியல்

67. வினைத்திட்பம்

( செய்யும் வினையை மன உறுதியுடன் செய்தல் )

661. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப
        மற்றைய வெல்லாம் பிற.

662. ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி
        னாறென்ப ராய்ந்தவர் கோள்.

663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி
        னெற்றா விழுமந் தரும்.

664. சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
        சொல்லிய வண்ணஞ் செயல்.

665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க
        ணூறெய்தி யுள்ளப் படும்.

666. எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
        திண்ணிய ராகப் பெறின்.

667. உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
        கச்சாணி யன்னா ருடைத்து.

668. கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
        தூக்கங் கடிந்து செயல்.

669. துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
        யின்பம் பயக்கும் வினை.

670. எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
        வேண்டாரை வேண்டா துலகு.