அங்கவியல்

74. நாடு

( நாட்டிற்குரிய இலக்கணம் )

731. தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
        செல்வருஞ் சேர்வது நாடு.

732. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா
        லாற்ற விளைவது நாடு.

733. பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற்
        கிறையொருங்கு நேர்வது நாடு.

734. உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
        சேரா தியல்வது நாடு.

735. பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
        கொல்குறும்பு மில்லது நாடு.

736. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
        நாடென்ப நாட்டிற் தலை.

737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
        வல்லரணு நாட்டிற் குறுப்பு.

738. பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம
        மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

739. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
        நாட வளந்தரு நாடு.

740. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
        வேந்தமை வில்லாத நாடு.