அங்கவியல்

77. படைமாட்சி

( படையின் சிறப்பு )

761. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
        வெறுக்கையு ளெல்லாந் தலை.

762. உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
        தொல்படைக் கல்லா லரிது.

763. ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
        நாக முயிர்ப்பக் கெடும்.

764. அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
        வன்க ணதுவே படை.

765. கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு
        மாற்ற லதுவே படை.

766. மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற
        மெனநான்கே யேமம் படைக்கு.

767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
        போர்தாங்குந் தன்மை யறிந்து.

768. அடல்தகையு மாற்றலு மில்லெனினுந் தானை
        படைத்தகையாற் பாடு பெறும்.

769. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு
        மில்லாயின் வெல்லும் படை.

770. நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
        தலைமக்க ளில்வழி யில்.