அங்கவியல்

83. கூடாநட்பு

( மனத்தளவில் பழகாது முகத்தளவில் பழகுபவரின் நட்பு )

821. சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
        நேரா நிரந்தவர் நட்பு.

822. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
        மனம்போல வேறு படும்.

823. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல
        ராகுதன் மாணார்க் கரிது.

824. முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா
        வஞ்சரை யஞ்சப் படும்.

825. மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
        சொல்லினாற் றேறற்பாற் றன்று.

826. நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ
        லொல்லை யுணரப் படும்.

827. சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்
        தீங்கு குறித்தமை யான்.

828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
        ரழுதகண் ணீரு மனைத்து.

829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
        நட்பினுட் சாப்புல்லற் பாற்று.

830. பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
        டகநட் பொரீஇ விடல்.