அங்கவியல்

85. புல்லறிவாண்மை

( சிற்றறிவினர் தன்னைத்தானே பெரிதாக மதித்துக்கொள்ளுதல் )

841. அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
        யின்மையா வையா துலகு.

842. அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது
        மில்லை பெறுவான் றவம்.

843. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
        செறுவார்க்குஞ் செய்த லரிது.

844. வெண்மை எனப்படுவ தியாதெனி னொண்மை
        யுடையம்யா மென்னுஞ் செருக்கு.

845. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
        வல்லதூஉ மையந் தரும்.

846. அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
        குற்ற மறையா வழி.

847. அருமறை சோரு மறிவிலான் செய்யும்
        பெருமிறை தானே தனக்கு.

848. ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர்
        போஒ மளவுமோர் நோய்.

849. காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
        கண்டானாந் தான்கண்ட வாறு.

850. உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
        தலகையா வைக்கப் படும்.