அங்கவியல்

88. பகைத்திறந்தெரிதல்

( பகைவன் திறனை ஆராய்தல் )

871. பகையென்னும் பண்பி லதனை யொருவ
        னகையேயும் வேண்டற்பாற் றன்று.

872. வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
        சொல்லே ருழவர் பகை.

873. ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
        பல்லார் பகைகொள் பவன்.

874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
        றகைமைக்கட் டங்கிற் றுலகு.

875. தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
        னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.

876. தேறினுந் தேறா விடினு மழிவின்கட்
        டேறான் பகாஅன் விடல்.

877. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
        மென்மை பகைவ ரகத்து.

878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
        பகைவர்கட் பட்ட செருக்கு.

879. இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
        கைகொல்லுங் காழ்த்த விடத்து.

880. உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
        செம்மல் சிதைக்கலா தார்.