அங்கவியல்

93. கள்ளுண்ணாமை

( மது அருந்தாதிருத்தல் )

921. உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
        கட்காதல் கொண்டொழுகு வார்.

922. உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
        னெண்ணப் படவேண்டா தார்.

923. ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
        சான்றோர் முகத்துக் களி.

924. நாண்ணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
        பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

925. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
        மெய்யறி யாமை கொளல்.

926. துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
        நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

927. உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
        கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

928. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
        தொளித்ததூஉ மாங்கே மிகும்.

929. களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
        குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
        லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.