அங்கவியல்

94. சூது

( சூதினால் வரும் தீங்கு )

931. வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
        தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

932. ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ
        னன்றெய்தி வாழ்வதோ ராறு.

933. உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
        போஒய்ப் புறமே படும்.

934. சிறுமை பலசெய்து சீரழக்குஞ் சூதின்
        வறுமை தருவதொன் றில்.

935. கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
        யிவறியா ரில்லாகி யார்.

936. அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு
        முகடியான் மூடப்பட் டார்.

937. பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
        கழகத்துக் காலை புகின்.

938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்
        தல்ல லுழப்பிக்குஞ் சூது.

939. உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
        மடையாவா மாயங் கொளின்.

940. இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
        முழத்தொறூஉங் காதற் றுயிர்.