அங்கவியல்

97. மானம்

( தன் நிலையிலிருந்து தாழாதிருத்தல் )

961. இன்றி யமையாச் சிறப்பின வாயினுங்
        குன்ற வருப விடல்.

962. சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
        பேராண்மை வேண்டு பவர்.

963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
        சுருக்கத்து வேண்டு முயர்வு.

964. தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
        நிலையி னிழிந்தக் கடை.

965. குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
        குன்றி யனைய செயின்.

966. புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்
        றிகழ்வார்பின் சென்று நிலை.

967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
        கெட்டா னெனப்படுத னன்று.

968. மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
        பீடழிய வந்த விடத்து.

969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
        ருயிர்நீப்பர் மானம் வரின்.

970. இளிவரின் வாழாத மான முடையா
        ரொளிதொழு தேத்து முலகு.