அங்கவியல்

103. குடிசெயல்வகை

( தான் பிறந்த குடியை உயரச் செய்தல் )

1021. கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
          பெருமையிற் பீடுடைய தில்.

1022. ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி
          னீள்வினையா னீளுங் குடி.

1023. குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
          மடிதற்றுத் தான்முந் துறும்.

1024. சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத்
          தாழா துஞற்று பவர்க்கு.

1025. குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
          சுற்றமாச் சுற்று முலகு.

1026. நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த
          இல்லாண்மை யாக்கிக் கொளல்.

1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
          ஆற்றுவார் மேற்றே பொறை.

1028. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
          மானங் கருதக் கெடும்.

1029. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
          குற்ற மறைப்பா னுடம்பு.

1030. இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று
          நல்லா ளிலாத குடி.