அங்கவியல்

104. உழவு

( உழவுத்தொழிலின் மேன்மை )

1031. சுழன்று மேர்ப்பின்ன துலக மதனா
          லுழந்து முழவே தலை.

1032. உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
          தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
          தொழுதுண்டு பின்செல் பவர்.

1034. பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப
          ரலகுடை நீழ லவர்.

1035. இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
          கைசெய்தூண் மாலை யவர்.

1036. உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
          விட்டேமென் பார்க்கு நிலை.

1037. தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
          வேண்டாது சாலப் படும்.

1038. ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபி
          னீரினு நன்றதன் காப்பு.

1039. செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந்
          தில்லாளி னூடி விடும்.

1040. இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி
          னிலமென்னு நல்லா ணகும்.