அங்கவியல்

105. நல்குரவு

( வறுமை )

1041. இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
          னின்மையே னின்னா தது.

1042. இன்மை யெனவொரு பாவி மறுமையு
          மிம்மையு மின்றி வரும்.

1043. தொல்வரவுந் தோலும் கெடுக்குந் தொகையாக
          நல்குர வென்னு நசை.

1044. இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
          சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

1045. நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத்
          துன்பங்கள் சென்று படும்.

1046. நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
          சொற்பொருள் சோர்வு படும்.

1047. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
          பிறன்போல நோக்கப் படும்.

1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
          கொன்றது போலு நிரப்பு.

1049. நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள்
          யாதொன்றுங் கண்பா டரிது.

1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை
          யுப்பிற்குங் காடிக்குங் கூற்று.