களவியல்

109. தகையணங்குறுத்தல்

( தலைவியின் அழகு தலைவனை வருத்துதல் )

1081. அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
          மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.

1082. நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
          தானைக்கொண் டன்ன துடைத்து.

1083. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
          பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

1084. கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
          பேதைக் கமர்த்தன கண்.

1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
          னோக்கமிம் மூன்று முடைத்து.

1086. கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
          செய்யல மன்னிவள் கண்.

1087. கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
          படாஅ முலைமேற் றுகில்.

1088. ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு
          ணண்ணாரு முட்குமென் பீடு.

1089. பிணையேர் மடநோக்கு நாணு முடையாட்
          கணியெவனோ வேதில தந்து.

1090. உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
          கண்டார் மகிழ்செய்த லின்று.