களவியல்

110. குறிப்பறிதல்

( தலைவியின் உள்ளக்குறிப்பை தலைவன் அறிதல் )

1091. இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
          நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

1092. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
          செம்பாக மன்று பெரிது.

1093. நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
          யாப்பினு ளட்டிய நீர்.

1094. யான்நோக்குங் காலை நிலன்நோக்கு நோக்காக்காற்
          றான்நோக்கி மெல்ல நகும்.

1095. குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
          சிறக்கணித்தாள் போல நகும்.

1096. உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ
          லொல்லை யுணரப் படும்.

1097. செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு
          முறாஅர்போன் றுற்றார் குறிப்பு.

1098. அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப்
          பசையினள் பைய நகும்.

1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
          காதலார் கண்ணே யுள.

1100. கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
          ளென்ன பயனு மில.