கற்பியல்

117. படர்மெலிந்திரங்கல்

( பிரிவுத்துயரால் தலைவி மெலிந்து வருந்துதல் )

1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க்
          கூற்றுநீர் போல மிகும்.

1162. கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
          குரைத்தலு நாணுத் தரும்.

1163. காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
          னோனா வுடம்பி னகத்து.

1164. காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து
          மேமப் புணைமன்னு மில்.

1165. துப்பி னெவனாவர் மற்கொ றுயர்வரவு
          நட்பினு ளாற்று பவர்.

1166. இன்பங் கடல்மற்றுக் காம மஃதடுங்காற்
          துன்ப மதனிற் பெரிது.

1167. காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன்
          யாமத்தும் யானே யுளேன்.

1168. மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
          வென்னல்ல தில்லை துணை.

1169. கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நா
          னெடிய கழியு மிரா.

1170. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
          நீந்தல மன்னோவென் கண்.