கற்பியல்

120. தனிப்படர்மிகுதி

( தலைவியின் தனிமைத் துன்பம் )

1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
          காமத்துக் காழில் கனி.

1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
          வீழ்வா ரளிக்கு மளி.

1193. வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
          வாழுந மென்னுஞ் செருக்கு.

1194. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
          வீழப் படாஅ ரெனின்.

1195. நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
          தாங்காதல் கொள்ளாக் கடை.

1196. ஒருதலையா னின்னாது காமங்காப் போல
          விருதலை யானு மினிது.

1197. பருவரலும் பைதலுங் காணான்கொல் காம
          னொருவர்க ணின்றொழுகு வான்.

1198. வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து
          வாழ்வாரின் வன்கணா ரில்.

1199. நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்
          டிசையு மினிய செவிக்கு.

1200. உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
          செறாஅஅய் வாழிய நெஞ்சு.