கற்பியல்

121. நினைந்தவர் புலம்பல்

( பிரிந்த தலைவனை நினைந்து தலைவி புலம்புதல் )

1201. உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
          கள்ளினுங் காம மினிது.

1202. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
          நினைப்ப வருவதொன் றில்.

1203. நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல்
          சினைப்பது போன்று கெடும்.

1204. யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
          தோஒ வுளரே யவர்.

1205. தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ
          லெந்நெஞ்சத் தோவா வரல்.

1206. மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா
          னுற்றநா ளுள்ள வுளேன்.

1207. மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே
          னுள்ளினு முள்ளஞ் சுடும்.

1208. எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ
          காதலர் செய்யுஞ் சிறப்பு.

1209. விளியுமென் னின்னுயிர் வேறல்ல மென்பா
          ரளியின்மை யாற்ற நினைந்து.

1210. விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்
          படாஅதி வாழி மதி.