கற்பியல்

125. நெஞ்சொடு கிளத்தல்

( தலைவி துன்பத்தை நெஞ்சுக்கு கூறுதல் )

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று
          மெவ்வநோய் தீர்க்கு மருந்து.

1242. காத லவரில ராகநீ நோவது
          பேதைமை வாழியென் னெஞ்சு.

1243. இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல்
          பைதனோய் செய்தார்க ணில்.

1244. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
          தின்னு மவர்க்காண லுற்று.

1245. செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா
          முற்றா லுறாஅ தவர்.

1246. கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
          பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு.

1247. காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
          யானோ பொறேனிவ் விரண்டு.

1248. பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
          பின்செல்வாய் பேதையென் னெஞ்சு.

1249. உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
          யாருழைச் சேறியென் னெஞ்சு.

1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
          வின்னு மிழத்துங் கவின்.