கற்பியல்

126. நிறையழிதல்

( தலைவி தன் நாணத்தை இழத்தல் )

1251. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு
          நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

1252. காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை
          யாமத்து மாளுந் தொழில்.

1253. மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்
          தும்மல்போற் றோன்றி விடும்.

1254. நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம
          மறையிறந்து மன்று படும்.

1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
          யுற்றா ரறிவதொன் றன்று.

1256. செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
          வெற்றென்னை யுற்ற துயர்.

1257. நாணென வொன்றோ வறியலங் காமத்தாற்
          பேணியார் பெட்ப செயின்.

1258. பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
          பெண்மை யுடைக்கும் படை.

1259. புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
          கலத்த லுறுவது கண்டு.

1260. நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
          புணர்ந்தூடி நிற்பே மெனல்.