கற்பியல்

130. நெஞ்சொடுபுலத்தல்

( தலைவி தன் நெஞ்சோடு ஊடுதல் )

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
          நீயெமக் காகா தது.

1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச்
          செறாஅரெனச் சேறியென் னெஞ்சு.

1293. கெட்டார்க்கு நட்டாரி லென்பதோ நெஞ்சேநீ
          பெட்டாங் கவர்பின் செலல்.

1294. இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
          துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

1295. பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு
          மறாஅ இடும்பைத்தென் னெஞ்சு.

1296. தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
          தினிய விருந்ததென் னெஞ்சு.

1297. நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென்
          மாணா மடநெஞ்சிற் பட்டு.

1298. எள்ளின் னிளிவாமென் றெண்ணி யவர்திற
          முள்ளு முயிர்க்காத னெஞ்சு.

1299. துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
          நெஞ்சந் துணையல் வழி.

1300. தஞ்சம் தமரல்ல ரேதிலார் தாமுடைய
          நெஞ்சந் தமரல் வழி.