கற்பியல்

131. புலவி

( ஊடல் )

1301. புல்லா திராஅப் புலத்தை யவருறு
          மல்லனோய் காண்கங் சிறிது.

1302. உப்பமைந் தற்றால் புலவி யதுசிறிது
          மிக்கற்றா னீள விடல்.

1303. அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப்
          புலந்தாரைப் புல்லா விடல்.

1304. ஊடி யவரை யுணராமை வாடிய
          வள்ளி முதலரிந் தற்று.

1305. நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
          பூவன்ன கண்ணா ரகத்து.

1306. துனியும் புலவியு மில்லாயிற் காமங்
          கனியுங் கருக்காயு மற்று.

1307. ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது
          நீடுவ தன்றுகொ லென்று.

1308. நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங்
          காதல ரில்லா வழி.

1309. நீரு நிழல தினிதே புலவியும்
          வீழுநர் கண்ணே யினிது.

1310. ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
          கூடுவே மென்ப தவா.